Monday, 27 January 2014

சிவபுராண விளக்க உரை

அறிவால் சிவனே என்று போற்றப்பட்ட மாணிக்கவாசகப் பெருமானார் அருளிய திருவாசகம் என்னும் தீந்தமிழ்ப் பனுவலின் முடி மணியாகத் திகழ்வது சிவபுராணம். திருவாசகம் என்னும் தமிழ் மறையை, குறிப்பாகச் சிவபுராண அகவலை நாள்தோறும் ஓதுகின்ற பழக்கம் தமிழ்ச் சமுதாயத்திலே பன்னெடுங்காலமாக இருந்து வந்திருக்கிறது. நாளும் சிவபுராணம் ஓதுவது சிவபூசை செய்வதற்கு நிகரானது என்று தமிழ்நாட்டில் ஒரு வழக்குண்டு.
"சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்" என்று மாணிக்கவாசகர் கூறிச் சென்றுள்ளதற்கு ஏற்ப சிவபுராணம் ஓதுகின்றவர்கள் அதன் முழுப் பொருளை உணர்ந்து ஓதுவது சிறப்புடையது. அந்த வகையில் அதை ஓதுகின்றவர்கள் அதைப் பொருள் உணர்ந்து ஓதுவதற்கும், புதிதாக ஓதப் புகுகின்ற அன்பர்கள் அதன் பொருளினைப் புரிந்து கொண்டு ஓதுவதற்கும் ஏற்ற வகையில் மூன்றாண்டுகளுக்கு முன்னர் சிவபுராண அகவலை ஒரு விளக்க உரையுடன் வெளியிட்டோம். சமுதாயத்தின் அனைத்துப் படியினருக்கும் எளிதாக வாங்கிப் படிக்கத் தக்க வண்ணம் மிக மிகக் குறைந்த விலையில் வெளியிடப்பட்ட அந்நூலுக்கு மிகப் பெரிய வரவேற்பு இருந்தது. அதனையடுத்து இரண்டாம் பதிப்பும் வெளியிடப்பட்டு சலுகை விலையில் வழங்கப்பட்டது.
தற்போது இந்நூலின் மூன்றாம் பதிப்பை மிகக் குறைந்த விலையில் வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.

Sunday, 26 January 2014

திருமந்திரப் பாடல்

திருமந்திரப் பாடல்...

“ஈறாய் முதல் ஒன்றாய் இரு பெண் ஆண் குணம் மூன்றாய்
மாறாமனை நான்காய் வருப+தம் அவை ஐந்தாய்
ஆறார்சுவை ஏழுஓசையோடு எட்டுத் திசைதானாய்
வேறாய் உடன் ஆனான் இடம் வீழிம் மிழலையே.”
ஏன்ற சம்பந்தர் தேவாரப் பாடல் இங்கு நினைவு கூரத்தக்கது.
திருமந்திரத்தில் உள்ள ஒன்பது தந்திரங்களில் (பிரிவுகளில்) முதல் தந்திரத்தில் சிவநெறியின் தொடக்க நிலைப் பொருள்கள் பலவற்றையும் பற்றி திருமூலர் அருளிச் செய்கின்றார். அனைத்து உலகத்திற்கும் மூலமும், முதலும் ஆன முழு முதற் கடவுள் சிவபெருமான். அவனது இயல்பினை விளக்குகின்ற முதல் அதிகாரத்துக்குச் சிவபரத்வம் எனப் பெயரிடப்பட்டது. சிவபெருமானுடன் ஒப்பிடத்தக்க ஒரு தெய்வம் விண்ணுலகிலும் இல்லை எனப்பட்டது

Friday, 24 January 2014

திருமந்திரப் பாடல்

திருமந்திரப் பாடல்

சிவனொடு ஒக்குந் தெய்வம் தேடினும் இல்லை
அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
துவனச் சடைமுடித் தாமரையானே.                    -5

திருமந்திரப் பாடல் தெளிவுரை

தேவருள்ளும் சிவனை நிகிர்ப்பவர் எவரும் இல்லை. மாந்தருள்ளும் அவனோடு ஒப்பாவார் ஒருவரும் இல்லை. இயல்பாகவே உலகைக் கடந்து நின்று உணர்வுக் கதிரவனாய் அறிவுச் சுடராய், (ஞான சூரியனாய்) விளங்குகின்ற முழு முதற் கடவுள் சிவபெருமானே.
இம்மண்ணுலகில் சித்தியாலும், முத்தியாலும் தாம் சிவனோடு ஒத்தவர் என்று கூறுகின்றவர்களை மறுத்தல் பொருட்டு அவனுக்கு நிகரானவர் வானுலகில் மட்டுமின்றி இங்கும் இல்லை எனப்பட்டது. பொன் போல் ஒளிர்கின்ற செந்நிறச் சடைமுடியான், தாவுகின்ற மானைத் (தா-மரை) தன் திருக்கரத்தில் ஏந்திய சிவபெருமான் என்றவாறு. கடந்தன்று என்பதை “அன்று கடந்து” என்று மாற்றிப் பொருள் கொள்க. “அன்று” என்றது அநாதி என்னும் பொருள் தந்து நிற்கும்.

Thursday, 23 January 2014

திருமந்திரம்

சைவத் திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாகத் திகழ்வது திருமூலர் அருளிச் செய்த திருமந்திரமாகும். இதற்கு மந்திரமாலை என்னும் மற்றொரு பெயரும் உண்டு. சைவ சமயத்திற்கும் முதல் சாத்திரமாகவும், தோத்திரமாகவும் அமைந்த அரிய நூல் திருமந்திரம். இந்நூல் இறை பக்தியையும், அன்பின் சிறப்பையும் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறநெறிகளையும் கூறுவதுடன். சமய வாழ்க்கை, யோக நெறிமுறைகள் போன்றவற்றையும் கூறுகிறது.
திருவாசகத் தெள்ளமுது இதழில் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் திருமந்திரத் தேன் துளிகள் என்ற பகுதியில் திருமந்திரப் பாடல்கள் விரிவான விளக்கத்துடன் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருந்தன. அதைப் படித்த பல வாசக அன்பர்கள் இவை அனைத்தையும் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும் என்று கடிதங்கள் மூலமும் தொலைபேசி வழியும் தெரிவித்தனர். அதன் விளைவே இத் திருமந்திர விளக்கவுரை நூல். விளக்க உரையும் தக்க எடுத்துக்காட்டுகளுடன், விரிவான வகையில் எழுதப்பட்டிருப்பது இந்நூலின் தனித் தன்மை.
பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள் உண்மை பற்றிப் பேசுகின்ற திருமந்திரத்தில் 9 தந்திரங்கள் உள்ளன. முதல் நான்கும் சிவ ஞானத்தை அடைய விழைவோர் தம்மைச் செம்மைப்படுத்திக் கொள்வதற்கான வழிமுறைகள் கூறுகின்றன. சைவ சித்தாந்தத் தத்துவங்களை ஐந்தாம் தந்திரம் மிகச் சிறப்பாகக் கூறுகிறது. ஆறு முதல் ஒன்பது வரையுள்ள நான்கு தந்திரங்களும் ஞானத்தால் பெறத் தக்க பல நலன்களையும் கூறுகின்றன. இந்த ஒன்பது தந்திரங்களில் இருந்தும் 300 பாடல்களைத் தெரிந்து எடுத்து விரிவான விளக்க உரையுடன் வெளியிட்டிருக்கிறோம்.
பழமைக்குப் பழமையாய்ப், புதுமைக்குப் புதுமையாய் விளங்கும் திருமந்திரப் பெருநூலின் அடிப்படைக் கருத்தை ஓரளவு அறிந்து கொள்ளும் வண்ணம் பாடல்களும் விளக்கமும் அமைந்துள்ளன. செந்தமிழ்ச் சிவனடியார்கள் அனைவரும் இந்நூலை ஓதியும், ஓதுவித்தும் சிவன் கருணைத் தேன் பருகி இன்புறுவர் என நம்புகிறோம்.

Tuesday, 21 January 2014

திருவாசகப் பாடல்

திருவாசகப் பாடல்

எம்பிரான் போற்றி வானத்து
அவர் அவர் ஏறு போற்றி
கொம்பர் ஆர் மருங்குல் மங்கை
கூறவெள் நீற போற்றி
செம்பிரான் போற்றி தில்லைத்
திருச்சிற்றம் பலவ போற்றி
உம்பரா போற்றி என்னை
ஆளுடை ஒருவ போற்றி

திருவாசகப் பாடல்  விளக்கம்

ஏமை ஆளும் அண்ணலே வணக்கம். விண்ணுளோர்க்கு வளம் தந்து அருளும் வேந்தனே வணக்கம். மங்கை உமையவளை ஒரு கூறாகக் கொண்ட மாபெருங் கருணையனே, வெண்ணீறு அணிந்தவனே, வீடுடையானே, செஞ்சுடரே, தில்லை அம்பலத்தில் ஆடுகின்ற ஆனந்தக் கூத்தனே, உயர்தனிப் பரம்பொருளே உன்னை வணங்குகிறேன்.

Thursday, 16 January 2014

திருவாசகமும் மணிவாசகரும்

திருவாசகமும் மணிவாசகரும்
திருவாசகமும் மணிவாசகரும்

இற்றைக்குச் சற்று ஏறக்குறைய ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர், பழம் பதியாகிய பாண்டி நாட்டில் வையை ஆற்றங்கரையில் உள்ள திருவாதவூர் என்னும் திருத்தலத்தில், ஆதிசைவர் குலத்தில் அவதரித்தார் மாணிக்கவாசகர். வாதவூரர் என்னும் பிள்ளைத் திருநாமம் பெற்று, கல்வி, கேள்விகளில் சிறந்து, நல்லொழுக்கின் தலைநின்றார். அவரது அறிவுத் திறத்தை அறிந்த மதுரை மன்னன் அரிமர்த்தன பாண்டியன் அவரை அழைத்துத் தன் அமைச்சராக்கிக் கொண்டதுடன் தென்னவன் பிரமராயன் என்ற பட்டத்தையும் அளித்துப் பெருமை செய்தான்.

அமைச்சுப் பணியில் இருக்கின்ற காலத்தே வாதவூரர் தேகமும் செல்வமும் நிலையாமை உணர்ந்து பதி நூல் ஆராய்ந்து சிவபெருமானிடம் அன்பு மேலிட்டுத் தக்கதொரு ஆச்சாரியரைக் காண்பதில் ஆவல் மிகுந்திருந்தனர். அது தருணம் கீழைக் கடற்கரையில் வெளிநாட்டினின்றும் குதிரைகள் விற்பனைக்கு வந்துள்ளன என்ற செய்தி கேட்ட பாண்டியன் தனது படைப் பெருக்கத்துக்கு வேண்டிய குதிரைகளை வாங்கி வருமாறு வாதவூரரைப் பணித்தனன். வாதவூரரும் வேந்தனின் விருப்பப்படி பெரும் பொருளுடன் கீழைக் கடற்கரைக்குப் புறப்பட்டனர்.

செல்லும் வழியில் திருப்பெருந்துறையை அடைகின்ற போது ஆங்கு கடலோசை போன்று சிவமுழக்கம் கேட்டது. வாதவூரர் அம் முழக்கத்தின் வழி சென்றனர். ஆங்கு ஒரு சோலை நடுவிருந்த குருந்த மரத்தடியில் மாணாக்கர்கள் புடைசூழ ஞானகுரு ஒருவர் வீற்றிருக்கக் கண்டனர். திருவருள் நோக்கம் பெற்ற வாதவூரர் குருவின் திருவடியில் அடியற்ற மரம் போல் வீழ்ந்து வணங்கினர். ஞான குருவாக வந்திருந்த சிவபெருமானும் கருணைக் கண்ணோக்கம் செய்து சுரத்தால் தீண்டித் திருவடி சூட்டிச் சிவஞான உபதேசம் செய்தருளினான் உபதேசம் பெற்றெழுந்த வாதவூரர், தனித் தமிழ் மந்திரமாம் நமசிவாயவெனும் நாமத்தை வாழ்கவெனப் பாட இறைவன் மாணிக்க வாசகன் என்னும் நற்பெயரைச் சூட்டினான் என்பது வரலாறு.

மாணிக்க வாசகரும் சிவநேய வயப்பட்டு இறை பணியில் நின்ற தாம் குதிரை வாங்கக் கொண்டு வந்த பொன்னைக் கொண்டு திருப் பெருந்துறையில் திருக்கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டார். செய்தி அறிந்த பாண்டியன் குதிரைகளுடன் வருமாறு பணித்தான். அடிகளும் சிவபெருமானின் ஆணைப்படி ஆவணி மூலத்தன்று குதிரைகள் வராதது கண்ட அரசன் மாணிக்க வாசகரைக் கொண்டு வரச் செய்து கடுமையாகத் தண்டித்தான். இறைவனும் நரிகளைப் பரியாக்கி அவைகளைத் தாமே சென்று பாண்டியனிடம் ஒப்புவித்து மாணிக்க வாசகரை மீட்பித்து அருளினன். அன்றிரவே குதிரைகள் நரியாக மாறி மற்ற குதிரைகளுக்கும் துன்பத்தை உண்டாக்கி விட்டு ஓடி மறைந்தன. இது கேட்ட மன்னவனும் மாணிக்க வாசகரை ஆற்றின் நடுவே சுடு மணலில் நிறுத்தி முதுகில் கல்லேற்றினான்.

இறையடியாரின் துன்பத்தைப் பொறாத இறைவன் வைகையில் வெள்ளம் பெருகி வரச் செய்தான். பெரு வெள்ளம் மண்டி ஆற்றின் கரை உடைந்தது. குடிகளைக் கரையடைக்குமாறு அரசாணை பிறந்தது. கரை அடைக்க ஆளின்றித் தவித்த வந்தி என்னும் பிட்டு வாணிச்சியின் பொருட்டு இறைவன் கூலியாளாக வந்து பிட்டுக்கு மண் சுமந்து அதை உரிய இடத்தில் கொட்டாது ஒடியாடித் திரியப் பாண்டியன் வெகுண்டு தன் பிரம்பால் அவன் முதுகில் அடித்தனன். இறைவன் முதுகில் பட்ட அடி பாண்டியன் முதலாக வைய முழுதுமுள்ள அனைத்து உயிர்கள் மேலும் பட்டது. மாணிக்க வாசகரது பெருமையை உணர்த்தி இறைவன் மறைந்தான்.

மன்னவனும் உண்மையுணர்ந்து மாணிக்க வாசகரது திருவடிகளில் பணிந்தான் மாணிக்க வாசகரும் அமைச்சுப் பணியைத் துறந்து சிவத் தொண்டில் ஈடுபட்டனர். திருத்தலங்கள் பலவற்றிற்கும் சென்று இறைவனைத் தம் தமிழால் பாடி வழிபட்டார். மாணிக்க வாசகப் பெருமானின் சிவநெறிச் செழுமை வாய்ந்த செய்யுட்களே திருவாசகப் பெருநூல் ஆயிற்று.